×

புதுக்கோட்டையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

புதுக்கோட்டை, பிப்.10: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நேற்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியான, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும்,

கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்மெர்சி ரம்யா, வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது).முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா, இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,District Collector ,Mercy Ramya ,Dinakaran ,
× RELATED நாகமலை புதுக்கோட்டை அருகே நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது